உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாஹரில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், அதே கட்டிடத்தில் வாடகைக்கு வசித்து வந்த ராஜு மற்றும் வீரு ஆகிய இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

மொட்டை மாடியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியைக் காணவில்லை எனத் தேடியபோது, கட்டிடத்திற்குப் பின்புறம் உள்ள ஒரு வயல்வெளியில் பலத்த காயங்களுடன் அந்தப் பிஞ்சு குழந்தை மீட்கப்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும், அந்தச் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

​இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தலைமறைவாக இருந்த ராஜு மற்றும் வீரு ஆகியோரைப் போலீசார் சுற்றி வளைத்தபோது, அவர்கள் போலீசாரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இரு குற்றவாளிகளின் கால்களிலும் குண்டு பாய்ந்தது.

காயமடைந்த நிலையில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆரம்பக்கட்ட விசாரணையிலேயே அவர்கள் சிறுமியைச் சீரழித்துக் கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.