தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், அதில் உள்ள முரண்பாடுகள் தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

பெரம்பூர் தொகுதிக்காகத் தாக்கல் செய்த மனுவில் தன் மீது ‘குற்ற வழக்குகள் ஏதும் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ள விஜய், திருச்சி கிழக்கு தொகுதிக்கான மனுவில் மட்டும் ‘இரண்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத்’ தெரிவித்துள்ளார். ஒரே வேட்பாளர் இரு வேறு தொகுதிகளில் தாக்கல் செய்த மனுக்களில் வழக்கு விவரங்கள் மாறுபட்டு இருப்பது தேர்தல் அதிகாரிகளிடையே பெரும் குழப்பத்தையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்னும் இரண்டு நாட்களே அவகாசம் உள்ள நிலையில், இந்தத் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால், விஜய்யின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்ற பரபரப்பு அரசியல் வட்டாரத்தில் தொற்றிக்கொண்டுள்ளது.