புனேயில் நேற்று பெய்த கனமழையின் போது, மெட்ரோ ரயில் பெட்டி ஒன்றின் உள்ளே தண்ணீர் கசியும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது, இது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வெளியே பெய்து வரும் கனமழையால் மெட்ரோ கூரையின் வழியாக மழைநீர் கசிகிறது என்று பயணிகள் அச்சமடைந்தனர்.
ஆனால், இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் அளித்துள்ள விளக்கம் தெளிவானது. நிர்வாகம் வெளியிட்ட தகவலின்படி, இது மழைநீர் கசிவு அல்ல, மாறாக குளிரூட்டும் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏசி இயந்திரத்தில் உள்ள வடிகால் குழாயில் தூசி அடைப்பு ஏற்பட்டதால், அதிலிருந்து வெளியேற வேண்டிய தண்ணீர் வெளியேற முடியாமல் பெட்டிக்குள் கசியத் தொடங்கியுள்ளது. உடனடியாக அந்த ஏசி இயந்திரம் அணைக்கப்பட்டு, அடைப்பு சரிசெய்யப்பட்டதாகவும், பயணிகளின் பாதுகாப்பிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
