மகாராஷ்டிராவின் தானே மாவட்டம் பிவாண்டி பகுதியில் மனைவியைக் கொன்று, அவரது உடலை 17 துண்டுகளாக வெட்டி நகரம் முழுவதும் வீசிய கொடூரமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில், தாஹா அன்சாரி என்ற 28 வயதுடைய ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ‘சோனு’ என்ற பெயராலும் அறியப்பட்டவர். அவரது மனைவி பர்வீன் (அல்லது முஸ்கான்) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். திருமணமாகி இரண்டாண்டுகளே ஆன இத்தம்பதிக்கு, ஒருவயது குழந்தையும் உள்ளதாக தெரியவந்துள்ளது.
சமீபத்தில், பிவாண்டி நகரின் சதுப்பு நிலப் பகுதியில் உள்ள ஒரு இறைச்சிக் கூடத்திற்கு அருகே ஒரு பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலை கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், பர்வீனின் தாயார் ஹனிபா கான் கொடுத்த மிஸ்ஸிங் புகாரின் அடிப்படையில் வழக்கை தீவிரமாக எடுத்து நடத்தினர்.
விசாரணையின் போது, தாஹா அன்சாரி தனது மனைவியை கொலை செய்த பின்னர், அவரது உடலை 17 துண்டுகளாக வெட்டி, பிவாண்டி நகரம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் வீசியது தெரியவந்தது. தாஹா இந்த குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தற்போது மோப்ப நாய்கள் மற்றும் தடவியல் நிபுணர்கள் உடல் பாகங்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில் பெண்ணின் உடல் பாகங்களை கண்டறியும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகிறது.
மேலும் தன்னுடைய கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக முஸ்கான் சந்தேகம் கொண்டு தகராறு செய்ததாகவும் அதனால் தம்பதிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு தன் மனைவியை அவர் கொலை செய்து உடம்பை துண்டு துண்டாக வீசி கொன்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
