குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பெண் ஒருவரை போக்குவரத்து காவலர் ஒருவர் நடுரோட்டில் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தனது ஓட்டுநர் உரிமத்தைக் காட்டிய பிறகு, அந்தப் போக்குவரத்து காவலரின் அடையாள அட்டையைக் கேட்டுள்ளார். காவலர் தனது அட்டையை நீட்டியபோது, அது எதிர்பாராதவிதமாக அப்பெண்ணின் கையிலிருந்து தவறி கீழே விழுந்தது.

இதனால் ஆத்திரமடைந்த காவலர், அப்பெண்ணை ஓங்கி அறைந்ததில் அவருக்குக் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அநாகரிகமான செயலை கண்டித்துள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி, அந்த காவலரை “சீருடை அணிந்த குண்டர்” என விமர்சித்துள்ளார்.

“>

மேலும் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்க பால்டி காவல் நிலையத்திற்குச் சென்றபோது, அங்கிருந்த அதிகாரிகள் முதலில் புகார் எடுக்க மறுத்து மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், நள்ளிரவு வரை காத்திருந்த அந்தப் பெண், இறுதியில் தனது புகாரைப் பதிவு செய்தார்.

இந்நிலையில் குஜராத் அரசின் பெண்கள் பாதுகாப்பு குறித்த வாக்குறுதிகளைக் கேள்விக்குறியாக்கியுள்ள இச்சம்பவம் குறித்து, சம்பந்தப்பட்ட காவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.