சென்னை அரும்பாக்கம், ஜெய் நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (49). டீ கடையில் வேலை பார்த்து வரும் இவர், தனது மனைவி அருள்மணியுடன் (45) குடும்பமாக வாழ்ந்து வந்தார். அருள்மணி, அதே பகுதியில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் வார்டனாக பணியாற்றி வந்துள்ளார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.
வேலைத்தடையின்றி தங்க வசதியுடன் இருக்கும் விடுதியில் அவர்கள் குடும்பமாக குடியேறி இருந்தனர். ராதாகிருஷ்ணனுக்கு நீண்ட காலமாக மது குடிக்கும் பழக்கம் இருந்தது. தினமும் மது அருந்திய பிறகு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஜூலை 30-ஆம் தேதி இரவு, வழக்கம்போல் குடித்துவிட்டு வீடு திரும்பிய ராதாகிருஷ்ணனுடன், அவரது மனைவி அருள்மணிக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் உச்சத்திற்கு சென்ற நிலையில், ராதாகிருஷ்ணன் தனது மனைவியின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார்.
அந்த அதிர்ச்சியில் மயங்கி கீழே விழுந்த அருள்மணியை அருகிலிருந்தவர்கள் உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, மருத்துவர்கள் பரிசோதித்த போது, அருள்மணி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கோயம்பேடு போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்களது வீட்டு அறை மற்றும் சுற்றுவட்டாரத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராதாகிருஷ்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
