அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், நடிகை நயன்தாராவைக் குறிப்பிட்டுப் பேசிய பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவி சண்முகத்தின் இந்தப் பேச்சுக்குப் பல தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் பெண்களை இழிவுபடுத்துவதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று அவர் அதிரடியாகத் தெரிவித்தார். பெண்களை மதிப்பதே தேமுதிகவின் கொள்கை என்றும், சிவி சண்முகத்தின் பேச்சு பெண்களின் கண்ணியத்தைக் குறைப்பதாக உள்ளதாகவும் அவர் சாடினார்.
மேலும் பேசிய அவர், “பெண்களை இழிவுபடுத்தும் சர்ச்சைப் பேச்சுகள் தொடர்ந்தால், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த பெண் சக்திகளையும் ஒன்று திரட்டி மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பேன்” என்று எச்சரித்தார். பெண்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தைப் பாதுகாக்கத் தேமுதிக எப்போதும் முன்னின்று போராடும் என்றும், சிவி சண்முகம் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பிரேமலதா விஜயகாந்தின் இந்தப் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெண்களுக்கான முன்னுரிமை மற்றும் பாதுகாப்பு குறித்த விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
