மத்திய கிழக்கில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள போரினால் இந்தியாவின் பொருளாதாரம் கடும் சவால்களை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. குறிப்பாக, உலகின் மிக முக்கிய கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால், இந்தியாவுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
இதனால், பெட்ரோல், டீசல் விலைகள் பெருமளவு உயரக்கூடும் என்பதோடு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் காப்பீட்டு செலவுகள் அதிகரிப்பால், இந்தியாவில் பணவீக்கம் ஏற்பட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும் அபாயம் உள்ளது.எரிபொருள் மட்டுமல்லாது, விவசாயம் மற்றும் தொழில் துறை சார்ந்த வர்த்தகமும் இந்த போரினால் பெரும் இழப்பைச் சந்திக்கும்.
ஈரான் வழியாக இந்தியா மேற்கொள்ளும் ஏற்றுமதி வர்த்தகம், குறிப்பாக பாஸ்மதி அரிசி மற்றும் மின்னணு சாதனங்களின் விற்பனை முடங்கியுள்ளது. மேலும், சரக்குக் கப்பல்கள் மாற்றுப் பாதையில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுவதால், போக்குவரத்து நேரம் மற்றும் செலவுகள் அதிகரித்து, நம் நாட்டின் ஏற்றுமதி வருவாய் பெருமளவு சரிவடையும் சூழல் உருவாகியுள்ளது. இந்தியாவின் முக்கிய திட்டமான சபாஹர் துறைமுக மேம்பாடும் இதன் மூலம் பாதிக்கப்படலாம்.
இந்த நெருக்கடியால் மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் சுமார் ஒரு கோடி இந்தியர்களின் பாதுகாப்பு மிகுந்த கவலைக்குரியதாக மாறியுள்ளது. போர்ச் சூழல் நீடித்தால், அவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் இயல்பு வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகும்.
அதேநேரம், பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்கள் அச்சமடைந்துள்ளதால் சந்தை வீழ்ச்சியைச் சந்திப்பதுடன், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் வரலாறு காணாத வகையில் 91.32 வரை சரிந்துள்ளது. சர்வதேச அளவில் உருவாகியுள்ள இந்த பதற்றமான சூழல், இந்தியாவின் பொருளாதார நிலைத்தன்மைக்குக் கடுமையான சோதனையை ஏற்படுத்தியுள்ளது.
