சத்தீஸ்கர் மாநிலம்  உள்ள சர்கன்வா கிராமத்தில் ஒரு வினோதமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள கிராம மக்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ‘நிகாளி’ பூஜையின் போது ஒரு ஆட்டைப் பலியிட்டுள்ளனர். அந்த ஆட்டை பலியிடுவதற்கு முன்பு வெறிநாய்க்கடி (ரேபிஸ்) நோய் பாதித்த நாய் ஒன்று கடித்திருந்தது தெரியவந்தது.

அந்த ஆட்டின் இறைச்சியைப் பிரசாதமாகச் சமைத்து கிராமத்தைச் சேர்ந்த சுமார் 400 ஆண்கள் சாப்பிட்டுள்ளனர். இதனால் அந்த இறைச்சியைச் சாப்பிட்டவர்களுக்கு ரேபிஸ் நோய் பரவி விடுமோ என்ற அச்சம் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபரீதத்தைப் பற்றித் தகவல் அறிந்ததும் சுகாதாரத் துறை அதிகாரிகள் உடனடியாக கிராமத்திற்குச் சென்று மருத்துவ முகாம்களை அமைத்தனர். இறைச்சியை நன்றாகச் சமைத்துச் சாப்பிடுவதால் ரேபிஸ் பரவுவதற்கு வாய்ப்பு குறைவு என்றும், பொதுவாகப் பாதிக்கப்பட்ட விலங்கின் உமிழ்நீர் மூலமே இந்நோய் பரவும் என்றும் மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. கிராம மக்கள் பயப்படத் தேவையில்லை என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.