சென்னை வடபழனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில், ஆதிபுரீஸ்வரர் சிவன் கோயில் பூசாரியான அசோக் பாரதி மீது பாலியல் புகார் எழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கரணையை சேர்ந்த இளம்பெண்ணின் கணவர், தனது மனைவி ஒரு பூசாரியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தெற்கு மண்டல இணை ஆணையரிடம் புகார் அளித்தார்.

பின்னர் இந்த வழக்கு வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட இளம்பெண் அடிக்கடி கோயிலுக்குச் சென்று வந்திருப்பதும், தனது குடும்ப பிரச்சனைகளை பூசாரியிடம் பகிர்ந்ததும் தெரியவந்தது.

அதற்கு ஆறுதல் கூறிய  பூசாரி, “ருத்ராட்சை மாலை தருகிறேன்” எனக் கூறி வடபழனியில் உள்ள வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அந்த வீட்டிற்கு சென்ற பெண் தனிமையில் இருந்தபோது பூசாரியால்  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக  கூறப்பட்டது. அந்த வீட்டுக்குள் திடீரென புகுந்த கணவர் பூசாரியை தாக்கினார்.

இதனையடுத்து பூசாரியின் பையை சோதனை செய்தபோது, அதில் பூஜைப் பொருள்களுக்கு பதிலாக வயகரா மாத்திரைகள் மற்றும் ஆணுரைகள் இருந்ததுதான் பரபரப்பை ஏற்படுத்தியது. இது உண்மையில் பாலியல் வன்கொடுமை வழக்கா, இல்லையெனில் திட்டமிட்ட பணம் பறிப்பு சதியா என்பது போலீசாரிடையே சந்தேகத்துக்குரிய விஷயமாகியுள்ளது.

தற்போது அசோக் பாரதி தான் போலீசில் முதலில் புகார் அளித்துள்ளார். அதில், அந்த இளம்பெண் மற்றும் கணவர் சேர்ந்து தன்னை மிரட்டி ₹10 லட்சம் பணம் கேட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தாக்கப்படுகிற வீடியோவும் விசாரணையின் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளன. இதைத் தொடர்ந்து அந்த பெண் தரப்பும் பவன் கல்யாண் என்ற இணை ஆணையரிடம் தனிப்பட்ட முறையில் புகார் அளித்துள்ளது.

இருவரும் ஒருவருக்கொருவர் மீது புகார் அளித்துள்ள நிலையில், தற்போது போலீசார் இருவரிடமும்  விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் ஆன்மீக தளங்களை நம்பும் பொதுமக்களிடையே குழப்பம் மற்றும் நம்பிக்கை தளர்வை உருவாக்கும் அபாயம் இருப்பதாக சமூகத்தில் அச்சம் நிலவுகிறது. உண்மை எது? யார் குற்றவாளி? என்பதை நிரூபிக்க விசாரணை இன்னும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.