உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், “புல்டோசர் நடவடிக்கை” குறித்து தான் அளித்த தீர்ப்பு தனக்கு பெரும் திருப்தியை அளித்ததாக தெரிவித்தார். பாஜக ஆளும் வட மாநிலங்களில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள், சட்டவிரோத ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களை காட்டி, எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் மாநகராட்சிகளால் வீடுகள் இடிக்கப்பட்டு வந்தன. குறிப்பாக, இஸ்லாமியர்களின் வீடுகள் குறிவைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, 2024 நவம்பர் 13 அன்று, நீதிபதிகள் கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, புல்டோசர் நடவடிக்கை சட்டபூர்வமானது அல்ல என்று தீர்ப்பளித்து, நாடு தழுவிய வழிகாட்டுதல்களை வகுத்தது. இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களின் கல்விக்குழு ஏற்பாடு செய்த பாராட்டு விழாவில் பேசிய தலைமை நீதிபதி கவாய், “அந்தத் தீர்ப்பின் மையத்தில் மனிதத்தின் பிரச்னைகள் இருந்தன. ஒரு குடும்பத்தில் ஒருவர் குற்றவாளி அல்லது குற்றம் சாட்டப்பட்டவர் என்பதற்காக, ஒட்டுமொத்த குடும்பமும் துன்புறுத்தப்படுவது முக்கியப் பிரச்சனையாக இருந்தது. இந்தத் தீர்ப்பு எனக்கு பெருமை அளித்தாலும், இதற்கு இணையான பங்கு நீதிபதி விஸ்வநாதனுக்கும் உண்டு” என்று கூறினார். இந்த தீர்ப்பு, அரசின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அமைந்ததாக பாராட்டப்பட்டது.
மேலும், நாடு முழுவதும் நீதித்துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தை விரைவுபடுத்துவதற்கும் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக கவாய் தெரிவித்தார். புல்டோசர் நடவடிக்கைக்கு எதிரான தீர்ப்பு, சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதாகவும், மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதாகவும் அமைந்துள்ளது. இந்த தீர்ப்பு மூலம், மாநகராட்சிகள் மற்றும் அரசு அமைப்புகள் முன்னறிவிப்பு இல்லாமல் இடிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்று தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
