நியூசிலாந்து நாட்டில் கேபிரியல்லா என்ற புயல் உருவாகியுள்ளது. இதனால் கனமழையும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஆக்லாந்து, நார்த்லேண்ட், தைராவிட்டி போன்ற பல மாவட்டங்களுக்கு உள்ளூர் அளவிலான அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூறாவளியால் குழந்தைகள் மற்றும் முதியவர்களை அரசு பாதுகாப்பான இடங்களுக்கு குடிப்பெயர செய்துள்ளது. மழை மற்றும் சூறாவளியால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு குழுவினர் 11 ராணுவ வாகனங்களுடன் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சூறாவளியின் போது ஒரு பெண்மணியின் வீட்டின் மேல் வங்கி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.

இதில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். புயலால் பல இடங்களில் தொலைத்தொடர்பு சாதனங்கள், மின்சாரங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை அதிகாரிகள் தொடர்பு கொள்ள முடியாத வண்ணம் உள்ளது. சூறாவளியை முன்னிட்டு கிழக்கு கடற்கரை பகுதிகளில் அலைகள் அதிக உயரத்திற்கு எழும்புவதால் நாளை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் அந்நாட்டில் லோயர் ஹட் பகுதியில் இருந்து 78 கிலோமீட்டர் தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் மக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.