ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி, பந்துவீச்சாளர்களின் மனதில் ஒருவித அச்சத்தை விதைக்கத் தொடங்கிவிட்டார் என்று தென்னாப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் டேல் ஸ்டெயின் புகழாரம் சூட்டியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போட்டியில், ஜஸ்பிரித் பும்ரா வீசிய முதல் பந்திலேயே வைபவ் சூர்யவன்ஷி சிக்ஸர் விளாசினார். இது குறித்து கருத்து தெரிவித்த டேல் ஸ்டெயின்,

பந்துவீச்சாளர்கள் மனதில் தான் எல்லைக்கோட்டிற்கு பந்தை விரட்டுவேன் என்ற பயத்தை வைபவ் ஏற்கனவே உருவாக்கிவிட்டார். பும்ரா போன்ற ஒரு உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர் ‘ஸ்லாட்டில்’ (In the slot) பந்து வீசுவது என்பது மிகவும் அரிதான ஒன்று. ‘தவறு செய்துவிடக் கூடாது, அப்படிச் செய்தால் இந்தச் சிறுவன் நம்மை சிக்ஸருக்குப் பறக்கவிட்டுவிடுவான்’ என்று பும்ராவின் ஆழ்மனதில் ஓடிய எண்ணமே, அவரை அந்தத் தவறைச் செய்யத் தூண்டியுள்ளது.

பும்ரா போன்ற ஒரு ஜாம்பவானாக இருந்தாலும் சரி, அல்லது சாதாரண பந்துவீச்சாளராக இருந்தாலும் சரி, வைபவ் எவருக்கும் அஞ்சுவதில்லை என்று ஸ்டெயின் சுட்டிக்காட்டினார். “இந்தச் சிறுவனுக்குப் பயம் என்பதே இல்லை. நீங்கள் சற்றுத் தவறினாலும் பந்து மைதானத்திற்கு வெளியேதான் விழும். பும்ரா போன்ற ஒரு வீரரே சிக்ஸர் வாங்கிய பிறகு, ‘நான் தவறு செய்தால் இது நடக்கும் என்று எனக்குத் தெரியும்’ என்பது போலச் சிரித்ததை நாம் பார்த்தோம். அதுதான் வைபவ்வின் பேட்டிங் வலிமை” என்று அவர் மேலும் கூறினார்.

 

கௌஹாத்தியில் மழையால் பாதிக்கப்பட்ட அந்தப் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. வைபவ் சூர்யவன்ஷி 14 பந்துகளில் 39 ரன்கள் (பும்ராவின் ஓவரில் 2 சிக்ஸர்கள் உட்பட) எடுத்தார். 24 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 32 பந்துகளில் 77 ரன்கள் (ஆட்டமிழக்காமல்) இருந்தார்.

இந்த ஜோடியின் 80 ரன்கள் அதிரடித் தொடக்க ஆட்டத்தால், ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் அணி தனது 3-வது தொடர் வெற்றியைப் பதிவு செய்தது. ஒரு ஜாம்பவான் பந்துவீச்சாளரே மற்றொரு இளம் வீரரைப் பார்த்து அஞ்சுவதாக டேல் ஸ்டெயின் கூறியிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.