ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் நேற்று நடைபெற்ற 13-வது லீக் ஆட்டத்தில், அனுபவம் வாய்ந்த பும்ராவின் பந்துவீச்சை 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சிதறடித்தது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.

19-வது ஐ.பி.எல். தொடரின் நேற்றைய ஆட்டம் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. பலத்த மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், நடுவர்கள் ஆட்டத்தை தலா 11 ஓவர்களாகக் குறைத்தனர்.

இப்போட்டியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது 15 வயதே ஆன ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிதான். உலகின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சை அவர் எதிர்கொண்ட விதம் மைதானத்தை அதிர வைத்தது.

பும்ரா வீசிய முதல் பந்தையே சற்றும் தயக்கமின்றி லாங்-ஆன் திசையில் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார் சூர்யவன்ஷி. அதே ஓவரில் மற்றுமொரு சிக்ஸரையும் விளாசி அசத்தினார். சிறுவன் ஒருவன் தனது பந்தை சிக்ஸருக்குத் தூக்கியதைக் கண்டு வியந்த பும்ரா, ஒரு மெல்லிய புன்னகையுடன் பந்துவீசச் சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் இந்த காட்சியை வைத்துப் பல்வேறு மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

வெறுமனே 14 பந்துகளைச் சந்தித்த சூர்யவன்ஷி, 5 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 39 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஷர்துல் தாக்கூர் வீசிய பந்தில் எல்லைக்கோடு அருகே அவர் கேட்ச் ஆனார். சூர்யவன்ஷியின் இந்த அதிரடித் தொடக்கம் ராஜஸ்தான் அணி வலுவான ஸ்கோரை எட்ட உதவியது. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கி ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, ராஜஸ்தானின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் திணறி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

 

 

View this post on Instagram

 

A post shared by IPL (@iplt20)