ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி காட்டிய அதிரடி ஆட்டம் கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராகக் கருதப்படும் ஜஸ்பிரித் பும்ராவின் ஓவரிலேயே தனது அதிரடியைத் தொடங்கினார் இந்த இடதுகை பேட்ஸ்மேன். பும்ரா வீசிய முதல் ஓவரிலேயே இரண்டு பிரம்மாண்ட சிக்ஸர்களை விளாசிய வைபவ், வெறும் 14 பந்துகளில் 39 ரன்கள் குவித்து அசத்தினார்.
கடந்த ஆண்டு பும்ராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த வைபவ், இந்த முறை அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தது மைதானத்திலிருந்த ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. வைபவ்வின் இந்த ஆட்டத்தைக் கண்டு வியந்த முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான், தனது யூடியூப் பக்கத்தில் அவரை வெகுவாகப் பாராட்டியுள்ளார். அவர் கூறியதாவது,
“சூர்யவன்ஷி ஒரு ‘விதியின் குழந்தை’ (Destiny’s child). 15 வயதில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அவர் செய்வதை இதற்கு முன் யாரும் செய்ததில்லை. பும்ரா போன்ற ஒரு ஜாம்பவான் பந்துவீச்சாளரையே சிந்திக்க வைத்துள்ளார் வைபவ். பந்துவீச்சாளரின் முகம் பாராமல், பந்தை மட்டுமே பார்த்து அடிக்கும் அவரது துணிச்சல் சிறப்பு வாய்ந்தது. இந்த சிறுவனை இந்திய அணிக்குத் தேர்வு செய்ய அதிக காலம் காத்திருக்க வைக்காதீர்கள். இப்போதே அவருக்கு இந்திய அணியின் தொப்பியை வழங்குங்கள்.
மேலும், 15 வயதிலேயே இவ்வளவு திறமை கொண்ட ஒருவர் இன்னும் 20 ஆண்டுகள் விளையாடினால், அது பந்துவீச்சாளர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும் என்றும் பதான் எச்சரித்துள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷி ஏற்கனவே கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளைத் தன்வசப்படுத்தியுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் விளையாடிய மற்றும் சதம் அடித்த மிக இளம் வீரர் என்ற சாதனை. யு-19 உலகக்கோப்பை 2026 இறுதிப்போட்டியில் 175 ரன்கள் குவித்து இந்தியா 6-வது முறையாக கோப்பை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார்.
சிஎஸ்கே அணிக்கு எதிராக 52 ரன்களும், மும்பைக்கு எதிராக 39 ரன்களும் எடுத்து தனது அதிரடியைத் தொடர்ந்து வருகிறார். தற்போதுள்ள ஃபார்மைப் பார்க்கும்போது, வைபவ் சூர்யவன்ஷி மிக விரைவில் இந்திய நீல நிறச் சீருடையில் சர்வதேசப் போட்டிகளில் களமிறங்குவார் என்பது உறுதி என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
