பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) கிரிக்கெட் தொடர், ஆட்டக்களத்தில் மட்டுமன்றி வர்ணனை அறையிலும் சர்ச்சைகளைச் சந்தித்து வருகிறது. முன்னாள் வீரர் ஆமிர் சொகைல், சக பெண் வர்ணனையாளரை கிண்டல் செய்த விதம் தற்போது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
முல்தான் சுல்தான்ஸ் – ராவல்பிண்டி பிண்டிஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனை லிசா ஸ்தலேகர் மற்றும் பாகிஸ்தானின் ஆமிர் சொகைல் ஆகியோர் வர்ணனை செய்து கொண்டிருந்தனர். அப்போது மைதானத்தில் ரிஸ்வான் வீரர்களை உற்சாகப்படுத்தியதைக் குறிப்பிட்டு லிசா பேசினார்.
இதற்குப் பதிலளித்த ஆமிர் சொகைல், “நீங்கள் பேருந்து நிலையத்தில் வேலை பார்த்தால் நிறைய பணம் சம்பாதிக்கலாம்” என்று கிண்டலாகக் கூறினார் (பேருந்து நடத்துநர் போல கூச்சலிடுவதைக் குறிப்பிட்டு). ஒரு பெண் வர்ணனையாளரை தனிப்பட்ட முறையில் அவமதிக்கும் வகையில் அமைந்த இந்த கருத்திற்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Lisa Sthalekar, “Good early call from Rizwan, we heard him on the stump mic. Chalo, chalo.”
Aamir Sohail, “You should be working at a bus stand. You would be earning a lot of money.” pic.twitter.com/TWLUK0SaOt
— Sheri. (@CallMeSheri1_) April 6, 2026
ஏற்கனவே இந்த சீசனில் பந்து சேதப்படுத்திய புகாரில் ஃபகார் ஜமானுக்கு இரண்டு போட்டிகள் தடை விதிக்கப்பட்டது. மேலும், ஹைதராபாத் கிங்ஸ்மேன் போட்டியின் போது பந்தின் நிறம் மாற்றப்பட்டது எனப் பல சர்ச்சைகள் நிலவி வரும் சூழலில், தற்போது இந்த வர்ணனை அறை மோதல் தொடருக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. போட்டியின் முடிவில், ராவல்பிண்டி பிண்டிஸ் அணி நிர்ணயித்த 183 ரன்கள் இலக்கை முல்தான் சுல்தான்ஸ் அணி மிக எளிதாக எட்டியது.
மேலும் 2026 பி.எஸ்.எல் தொடரில் அறிமுகமான முல்தான் சுல்தான்ஸ் அணி, ஸ்டீவ் ஸ்மித், ஆஷ்டன் டர்னர் போன்ற நட்சத்திர வீரர்களுடன் களமிறங்கி 5 போட்டிகளில் 4 வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட லாகூர் கலாண்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே அந்த அணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
