வாழ்நாளின் பெரும்பகுதியைப் பெற்ற பிள்ளைகளின் நலனுக்காகவே தியாகம் செய்யும் பெற்றோர்கள், அதே பிள்ளையின் உயிரைக் குடித்துவிடும் அசுரர்களாக என்று மாறுவார்கள்? ஆத்திரமும், கட்டுப்பாடற்ற கோபமும் மனித மூளையை அடைக்கும்போது, இரத்தப் பாசமும், பெத்த வயிறும் கூட வெறும் து தூசிக்குச் சமமாகி விடுகிறது என்பதற்குப் புனே நகரில் நடந்த இந்த நரம்புகளை உறைய வைக்கும் சம்பவம் ஒரு கரிய சான்றாக மாறியிருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவை  சேர்ந்த 64 வயதான பகவான் சூரியபான் கெய்க்வாட் மற்றும் 60 வயதான பார்வதி கெய்க்வாட் தம்பதியருக்கு 30 வயதில் மகேஷ் என்ற மகன் இருந்தான். 10 ஆண்டுகளுக்கு முன்பே திருமணமான மகேஷ், தீவிர மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி, எந்த வேலைக்கும் செல்லாமல் தன் வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டிருந்தான். இதன் காரணமாக அவனது மனைவியும் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு அவனைப் பிரிந்து சென்றார். விவாகரத்தான பிறகு, ஆதரவற்று தனிமையில் வாழ்ந்த மகேஷ், உணவிற்காகத் தன் வயதான பெற்றோரின் வீட்டைத் தான் முழுமையாக நம்பியிருந்தான்.

ஆகஸ்ட் 25-ஆம் தேதி நள்ளிரவு… எப்போதும் போல அன்றும் மதுபோதையில் நிலைதடுமாறியபடி தன் பெற்றோரின் வீட்டிற்குள் நுழைந்தான் மகேஷ். பசியில் இருந்த அவன், தன் தாயிடம் “எனக்கு மட்டன் குழம்பு சமைத்துத் தா” என்று அடம்பிடிக்கத் தொடங்கினான்.

ஆனால், இந்து சமய நம்பிக்கைகளின்படி புனிதமான ‘ஸ்ராவண’ மாதம் (ஷ்ராவண்) நடந்துகொண்டிருந்ததால், வீட்டின் தூய்மையைப் பேணும் பொருட்டு அக்குடும்பத்தினர் அசைவ உணவைச் சமைப்பதை முழுமையாகத் தவிர்த்து வந்தனர். “இந்த மாதத்தில் வீட்டில் மட்டன் சமைக்க முடியாது” என்று பெற்றோர் அமைதியாக மறுத்துள்ளனர்.

போதையின் உச்சத்தில் இருந்த மகேஷிற்கு பெற்றோர் சொன்ன வார்த்தைகள் காதில் விழவில்லை. தன் பிடிவாதத்தை விடாமல், பெற்றோர் என்றும் பாராமல் அவர்களுடன் தகராறில் ஈடுபட்டான். வாக்குவாதம் முற்றி, கை கலப்பாக மாறியது. பெற்ற வயிறையும் மறந்து, வயதான தந்தையின் மீது மகன் கை வைக்க முயன்ற அந்த நொடியில்… தந்தையின் மனதில் பல வருடங்களாக அடைபட்டுக்கிடந்த விரக்தியும் ஆத்திரமும் எரிமலையாக வெடித்தது!

ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற 64 வயது தந்தை பகவான், அருகில் இருந்த பொருளைக் கொண்டு மகேஷின் முகத்திலும் தலையிலும் இரக்கமின்றிப் பலமாகத் தாக்கினார். முகத்தில் விழுந்த கொடூரமான அடிகளால் இரத்த வெள்ளத்தில் சரிந்த 30 வயது மகேஷ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

மகன் பிணமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் பார்வதி, ஒரு நர்சிங் ஹோமில் செவிலியராகப் பணியாற்றி வந்தவர். கணவன் சிறைக்குச் சென்றுவிடுவான் என்ற பயத்தில், தன் செவிலியர் மூளையைப் பயன்படுத்தி ஆதாரங்களை அழிக்கத் துணிந்தார்!

சுவரிலும் தரையிலும் சிதறிக்கிடந்த மகனின் இரத்தக் கறைகளை அவசர அவசரமாகத் துடைத்துச் சுத்தம் செய்தார். மூத்த மகனுக்குத் தொலைபேசியில் தவறான தகவல்களைக் கூறி உண்மையை மறைக்க முயன்றார். ஆனால், சந்தேகமடைந்த மூத்த மகன் காவல் நிலையத்தில் புகாரளிக்க,  காவல்துறையினர் உள்ளே புகுந்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பெத்த மகனைக் அடித்துக் கொன்ற தந்தை பகவானும், கொலையை மறைத்துச் சாட்சியங்களை அழித்த தாய் பார்வதியும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஒரு தட்டு உணவிற்காகவும், ஒரு மாத கால ஆன்மீக நம்பிக்கைக்காகவும் தொடங்கிய எளிய குடும்ப வாக்குவாதம், ஒருவனின் உயிரைப் பறித்து, இன்னொருவனைச் சிறைக்கு அனுப்பி, அந்த முழு குடும்பத்தையுமே சுடுகாடாக மாற்றியிருக்கிறது.

மதுப் பழக்கம் ஒரு மனிதனின் அறிவை எப்படிக் குருடாக்குகிறது என்பதற்கும், ஆத்திரம் ஒரு தந்தையின் மனசாட்சியை எப்படி அசுரனாக மாற்றுகிறது என்பதற்கும் இந்தச் சம்பவம் ஒரு கசப்பான பாடம். புனிதமான மாதத்தில் இறைவனைத் தேடிய குடும்பத்தில், சாத்தானின் கோபம் புகுந்து இரத்தப் பலியைக் கேட்டுவிட்டது!