மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டம் வைஜாபூரில் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது. காலாவதியான உணவுப் பொருளை உட்கொண்ட இரண்டு வயது குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். இதையடுத்து உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அதிகாரியை அவர்கள் முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர்.
வைஜாபூர் சாலையில் உள்ள பான் கடையில் மிதுன் பஹிரட், தாதாசாஹேப் தோம்ப்ரே ஆகியோர் உணவுப் பொருளை வாங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பொருளை இரண்டு வயது குழந்தைக்கு வழங்கிய நிலையில், சிறிது நேரத்திலேயே குழந்தைக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து குழந்தை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. புகாரின் பேரில் உணவு மற்றும் மருந்து நிர்வாக அதிகாரிகள் கடைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
A Food and Drug Administration (FDA) officer was reportedly confronted by an angry crowd during an inspection of a paan shop in Maharashtra’s Chhatrapati Sambhajinagar after locals alleged that the shop was selling expired food products.
A video of the confrontation circulating… pic.twitter.com/5B3RtCD5Bp
— Hate Detector 🔍 (@HateDetectors) August 29, 2026
ஆய்வின்போது புகாரில் குறிப்பிடப்பட்டிருந்த உணவுப் பொருள் கடையில் கிடைக்கவில்லை. அதேவேளையில், சில காலாவதியான பிஸ்கெட்டுகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடை உரிமையாளர் காலாவதியான பொருள்களை மறைத்துவிட்டு, காலாவதியாகாத பொருள்களை அதிகாரிகளிடம் காண்பித்ததாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். மேலும், இந்த விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவர அதிகாரியிடம் பணப் பரிமாற்றம் நடைபெற்றதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். எனினும், இந்தப் பணப் பரிமாற்ற குற்றச்சாட்டு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
இதையடுத்து கங்காபூர் பகுதியில் அதிகாரியை பொதுமக்கள் வழிமறித்து முற்றுகையிட்டனர். அப்போது பறிமுதல் செய்யப்பட்ட காலாவதியான பிஸ்கெட்டுகளை அதிகாரியிடம் கொடுத்து சாப்பிடுமாறு சிலர் வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டதால் அந்தப் பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தகவலறிந்து பயிற்சி துணை ஆட்சியர் வினய் சோனவனே உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சட்டரீதியாக புகார் அளிக்குமாறு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து போலீஸார் கூட்டத்தைக் கலைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட உணவுப் பொருள்கள் தொடர்பான விசாரணை மற்றும் குழந்தையின் உடல்நலக்குறைவு குறித்த விசாரணையின் முடிவிலேயே உண்மை நிலவரம் தெரியவரும்.
