சத்தீஸ்கர் மாநிலத்தில், தர்பூசணி பழம் சாப்பிட்ட 15 வயது சிறுவன் அகிலேஷ் திவாரி பரிதாபமாக உயிரிழந்தான். தனது பாட்டி வீட்டிற்குச் சென்றிருந்த அகிலேஷ், அங்குள்ள உறவினர்களுடன் சேர்ந்து தர்பூசணி சாப்பிட்டுள்ளான். பழம் சாப்பிட்ட சில மணி நேரத்திலேயே அவனுக்கு கடும் வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
அவனுடன் பழம் சாப்பிட்ட மற்ற மூன்று சிறுவர்களுக்கும் அதே போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அகிலேஷ் உயிரிழந்த நிலையில், காலையிலேயே வெட்டி வைக்கப்பட்ட பழத்தை மாலையில் சாப்பிட்டதே இந்த விபரீதத்திற்கு காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நீண்ட நேரம் வெட்டி வைக்கப்பட்டிருந்த அந்த தர்பூசணி பழம் கெட்டுப்போய் ‘புட் பாய்சன்’ ஆனதால் இந்த உயிரிழப்பு நேர்ந்துள்ளது. இது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறையினர் வீட்டில் இருந்த மற்ற பழங்களைச் சோதனைக்காக எடுத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
