தூத்துக்குடி மாவட்டம் தெர்மல்நகர் லேபர் காலனியை சேர்ந்த அரிச்சந்திரனின் மகள் (வயது 18) ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவரது மகள், அதே பகுதியில் வசிக்கும் மாரிச்செல்வம் என்பவரை காதலிப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில், மாணவி தனது புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதை கண்டித்த மாரிச்செல்வம், கடுமையான வார்த்தைகளில் அவரிடம் சண்டையிட்டதாகவும், அதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மாணவி, வீட்டில் யாரும் இல்லாத சமயம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தி பரவியதும் அவரது உறவினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து, மாணவியின் மரணத்தில் மாரிச்செல்வத்திற்கே நேரடி காரணம் எனக் கூறி, தெர்மல்நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“அவனை கைது செய்ய வேண்டும். இல்லையெனில், மாணவியின் உடலை எங்களிடம் ஒப்படைக்க வேண்டாம்” என  கண்டனம் தெரிவித்தனர்.  பரபரப்பான சூழலில் போலீசார் ஆறுதல் கூறி போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர், மாணவியின் தந்தையின் புகாரின் பேரில், மாரிச்செல்வம் மீது தற்கொலைக்கு தூண்டியதற்கான பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.