நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன்–ஸ்ரீபிரியா தம்பதிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக, சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீபிரியா கணவனிடமிருந்து பிரிந்து கோவை மாவட்டத்திற்கு வந்து, தனியார் விடுதியில் தங்கி, அங்குள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், ஸ்ரீபிரியாவுக்கும், அவரது உறவினரான இசக்கிராஜாவுக்கும் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை இசக்கிராஜா, பாலமுருகனுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் கடும் கோபமடைந்த பாலமுருகன், நேற்று இரவு கோவை வந்ததாக போலீஸ் கூறுகிறது.

இதன் தொடர்ச்சியாக, இன்று அதிகாலை ஸ்ரீபிரியா தங்கி வந்திருந்த பெண்கள் விடுதியின் முன்பாக காத்திருந்த பாலமுருகன், அவர் வெளியே வந்ததும் தன்னிடம் இருந்த அரிவாளால் தாக்கியுள்ளார். கடுமையாக காயமடைந்த ஸ்ரீபிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், ஸ்ரீபிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பாலமுருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பெண்கள் விடுதியில் பெண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.