உலகின் மிகச் சிறந்த மற்றும் செல்வாக்கு மிக்க ஜாஸ் (Jazz) இசைக்கலைஞர்களில் ஒருவரான சாக்ஸபோன் (Saxophone) ஜாம்பவான் சோனி ரோலின்ஸ் (Sonny Rollins), அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் உட்ஸ்டாக்கில் உள்ள அவரது இல்லத்தில் திங்கள்கிழமை (மே 25, 2026) காலமானார். அவருக்கு வயது 95. வயது மூப்பு மற்றும் பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் காரணமாகக் கடந்த சில ஆண்டுகளாக அவர் வீட்டிலேயே முடங்கியிருந்த நிலையில் அவரது உயிர் பிரிந்ததாக அவரது செய்தித் தொடர்பாளர் டெர்ரி ஹிண்டே தெரிவித்துள்ளார்.

1940-களின் ‘பெபாப்’ (Bebop) இசை சகாப்தத்தின் கடைசி வாழும் சாட்சியாகக் கருதப்பட்ட சோனி  ஜான் கோல்ட்ரேன் மற்றும் சார்லி பார்க்கர் ஆகியோருக்கு இணையாக உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்களால் போற்றப்பட்டவர். அவரது மறைவு உலக இசைத் துறைக்குப் பேரிழப்பாகக் கருதப்படுகிறது.

ஹார்லெம் பகுதியில் 1930-இல் பிறந்த சோனி, தனது 19-ஆவது வயதில் ஹெராயின் போதைக்கு அடிமையாகி, சிறைவாசம் மற்றும் வீடற்ற வாழ்க்கையை எதிர்கொண்டார். பின்னர் 1954-இல் போதை மறுவாழ்வு பெற்று, ஆன்மிக விழிப்புணர்வுடன் மீண்டும் இசைக்குத் திரும்பிய அவர், ‘சாக்ஸபோன் கொலோசெஸ்’ (Saxophone Colossus) உள்ளிட்ட பல வரலாற்றுச் சிறப்புமிக்க ஆல்பங்களை வெளியிட்டார். புகழின் உச்சத்தில் இருந்தபோது திடீரென இசை உலகை விட்டு விலகி, வில்லியம்ஸ்பர்க் பாலம் மீது தனியாக நின்று பல மணி நேரம் பயிற்சி செய்தது மற்றும் ஜப்பானில் ஜென் பௌத்தத்தை தழுவியது என இவரது வாழ்க்கை பல திருப்பங்கள் நிறைந்தது.

ராக் இசைக்குழுவான ‘ரோலிங் ஸ்டோன்ஸ்’ உடன் இணைந்து பணியாற்றியது மற்றும் புகழ்பெற்ற கிராமி விருதுகளை வென்றது என 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஜாஸ் இசையில் புதுமைகளைப் புகுத்திய சோனி, நுரையீரல் பாதிப்பு காரணமாக 2014-இல் வாசிப்பதை நிறுத்தினார். இவரது மறைவுக்கு உலகெங்கிலும் உள்ள இசைப் பிரியர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.