மகாராஷ்டிரா மாநிலம் பீட் (Beed) மாவட்டத்தில் உள்ள சுவாமி ராமானந்த தீர்த்த அரசு மருத்துவமனையில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த ஜூலை 7ம் தேதி இரவு பாலிகா என்ற பெண் ஒரு குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தையை பார்த்த மருத்துவர்கள், பிறந்தவுடன் குழந்தை இறந்துவிட்டதாக கூறி, மறுநாளில் குழந்தையின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

குழந்தையின் உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்ற குடும்பம், கிராம பாரம்பரியப்படி அடக்கம் செய்ய தயாராக இருந்தனர். குழந்தையின் தாத்தா சகாராம் , குழந்தையை பைக்கில் ஒரு பையில் வைத்து ஊருக்குக் கொண்டு சென்றார்.

அந்த நேரத்தில், குழந்தையின் பாட்டி, “ஒருமுறை முகத்தைப் பார்த்து விடலாம்” என கூறி துணி அகற்றினார். அப்போது அந்த குழந்தை அசைவதைக் கண்டார்.  உடனடியாக குழந்தையை  அருகிலுள்ள அம்பாஜோகாய் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

பின்னர் குழந்தை மீண்டும் சுவாமி தீர்த்த மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. தற்போது குழந்தை நிலைமை நலமாக உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இது மிக அபூர்வமான “லாசரஸ் சிண்ட்ரோம்” மற்றும் “சஸ்பெண்டட் அனிமேஷன்” எனப்படும் மருத்துவ சூழ்நிலையின் விளைவாக இருக்கலாம் என டாக்டர் சங்கர் தாபதே தெரிவித்துள்ளார்.

குழந்தையின் தாயார் பாலிகா, “நள்ளிரவில் குழந்தை மூச்சு விடுவதை பார்த்தோம், ஆனால் நர்ஸ் எங்கள் வார்த்தையை மீறி குழந்தை இறந்துவிட்டதாகவே கூறினார்,” எனக் கூறி மருத்துவமனை மீது கடும் குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் விசாரணைக்குழுவை அமைத்துள்ளது.

லாசரஸ் சிண்ட்ரோம் என்பது, மரண அறிவிப்புக்குப் பிறகு திடீரென உயிர்நிலை திரும்பும் அபூர்வ நிலை. இதற்கு காரணமாக, சில நேரங்களில் இரத்த ஓட்டத்தில் ஏற்பட்ட தடை நீங்கும் போதும், திடீரென இதயம் மீண்டும் இயங்கத் தொடங்கும்.

இந்த சம்பவம், மகாராஷ்டிரா அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவ கவனக்குறைவுகள் மற்றும் நியாயமான ஆய்வுகளின் தேவை குறித்து புதிய கேள்விகளை எழுப்பி உள்ளது. சமூக வலைதளங்களிலும் மக்கள் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். குழந்தை உயிருடன் மீண்டது வியப்பளிக்கும் அதிசயமாக அமைந்தாலும், அந்தக் குடும்பம் சந்தித்த துயர அனுபவம் எவருக்கும் ஏற்படக்கூடாதது என்பது அனைவரது மனநிலையாக உள்ளது.