மும்பை குர்லா மேற்குப் பகுதியில் 21 வயதான அப்துல் ரஹ்மான் என்பவருக்கு அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, நண்பர்களே அவருக்குத் தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நவம்பர் 25 அன்று நள்ளிரவுக்குப் பின் அப்துலை அழைத்த அவரது நண்பர்களான அயாஸ் மாலிக், அஷ்ரஃப் மாலிக், காசிம் சவுத்ரி, ஹுசைஃபா கான், ஷெரிஃப் ஷேக் ஆகியோர் கேக் வெட்டச் சொல்லி, முட்டைகள் மற்றும் கற்களை வீசித் தாக்கியுள்ளனர்.

இதில், அயாஸ் மாலிக் என்பவர் தனது ஸ்கூட்டரில் இருந்த பெட்ரோல் போன்ற எரியக்கூடிய திரவத்தை அப்துல் மீது ஊற்றி, லைட்டரால் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. வலி தாங்காமல் அப்துல் ஓடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், காவலாளி உதவியுடன் தீ அணைக்கப்பட்டது. முகம், கைகள் மற்றும் மார்பில் பலத்த தீக்காயமடைந்த அப்துல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

“>

 

அப்துலின் புகாரின் பேரில், இந்திய நியாய சன்ஹிதா பிரிவு 110 (குற்றவியல் மனிதக்கொலை முயற்சி) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த வினோபா பாவே போலீஸார், சம்பந்தப்பட்ட ஐந்து பேரையும் கைது செய்து நவம்பர் 29ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்துள்ளனர். இது திட்டமிட்ட சதிச்செயலா என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.