ஆவடியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குறித்து அதிரடியான கருத்தைத் தெரிவித்துள்ளார். பிரேமலதாவின் உடலில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் ஆவி புகுந்துவிட்டதாகவும், அதனால்தான் திமுக ஆட்சியில் நடக்கும் வன்கொடுமைகளை அவர் சேலம் கூட்டத்திலேயே தைரியமாகப் பேசினார் என்றும் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலையின் இந்தப் பேச்சு அங்கிருந்தவர்களிடையே பெரும் சிரிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

​தொடர்ந்து பேசிய அவர், திமுக கூட்டணி தற்போது உடைந்துபோன தேங்காயைப் போலச் சிதறிக் கிடப்பதாகச் சாடினார். மக்கள் நலனில் அக்கறை இல்லாத இந்தத் திமுக கூட்டணிக்கு மக்கள் யாரும் வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். திமுக ஆட்சிக்கு எதிராகப் பிரேமலதா பேசும் உண்மைகள் அனைத்தும் விஜயகாந்தின் ஆன்மா கொடுத்த தைரியம் என்று அண்ணாமலை பேசியுள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.