போபால் நகரைச் சேர்ந்த துவிஷா சர்மா என்ற பெண், திருமணமான ஐந்தே மாதங்களில் தனது கணவர் வீட்டில் உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணம் தொடர்பாக போபால் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணையில், காவல் துறையின் விசாரணை மற்றும் எய்ம்ஸ் பிரேதப் பரிசோதனை அறிக்கை ஆகியவற்றில் உள்ள குளறுபடிகள் குறித்து துவிஷாவின் தரப்பு வழக்கறிஞர் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இது குறிப்பாக, பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள துவிஷாவின் உயரம், காவல் துறை அறிக்கையில் உள்ள உயரத்துடன் ஒத்துப்போகவில்லை என்பது போன்ற முரண்பாடுகள் இந்த வழக்கைச் சந்தேகத்திற்குரியதாக மாற்றியுள்ளன.

மேலும், துவிஷாவின் மரணத்தில் உள்ள கால இடைவெளிகளும், ஆதாரங்களும் மர்மமாகவே உள்ளன. சிசிடிவி காட்சிகளில் துவிஷா மாடிக்குச் சென்ற நேரத்திற்கும், அவரது உடல் கீழே கொண்டு வரப்பட்ட நேரத்திற்கும் இடையே உள்ள கால இடைவெளிக்கும், எஃப்ஐஆர்-ல் குறிப்பிடப்பட்டுள்ள இறப்பு நேரத்திற்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு உள்ளது.

அதுமட்டுமின்றி, அவரது வயது குறித்த முரண்பட்ட தகவல்கள், சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பெல்ட் சரியான நேரத்தில் சமர்ப்பிக்கப்படாதது போன்ற பல கேள்விகளுக்கு விடை கிடைக்காததால், துவிஷாவின் குடும்பத்தினர் முறையான விசாரணை கோரி வருகின்றனர். தற்போதைய சூழலில், துவிஷாவின் கணவர் சமர்த் சிங் தலைமறைவாக உள்ள நிலையில், இரண்டாவது பிரேதப் பரிசோதனைக்கும் காவல் துறை அனுமதி அளித்துள்ளது.