உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் மருத்துவமனையின் கடுமையான அலட்சியத்தால் தனது தாயின் கையை இழக்க நேரிட்டதாகக் கூறி, இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் (ITBP) படை வீரர் ஒருவர், தனது தாயின் வெட்டப்பட்ட கையை பாக்ஸில் தூக்கிக்கொண்டு காவல் ஆணையர் (Police Commissioner) அலுவலகத்திற்கு நீதி கேட்டு வந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஐடிபிபி ஜவான் விகாஸ் சிங்கின் தாயாருக்கு கடந்த மே 13 அன்று மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், கான்பூர் ஜி.டி ரோட்டில் உள்ள கிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையின் காரணமாகத் தாயின் கையில் கடுமையான தொற்று (Infection) ஏற்பட்டு நிலைமை மோசமடைந்துள்ளது.

இதையடுத்து மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், தொற்றைத் தடுக்க மே 17 அன்று அவரது தாயின் வலது கையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து துண்டித்துள்ளனர். மருத்துவமனைகளின் இந்த அலட்சியம் குறித்து ஜவான் விகாஸ் சிங் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது, போலீசார் எஃப்ஐஆர் (FIR) பதிவு செய்யாமல் இழுத்தடித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமும் வேதனையும் அடைந்த ஜவான், தனது தாயின் வெட்டப்பட்ட கையை ஒரு தெர்மாகோல் பாக்ஸில் ஆதாரமாக எடுத்துக்கொண்டு நேராகக் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து கண்ணீர் மல்க நீதி கேட்டுள்ளார்.

இந்த காட்சியைப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக தலையிட்ட போலீஸ் கமிஷனர், இந்த மெகா அலட்சியம் குறித்து விசாரிக்க முதன்மை மருத்துவ அதிகாரி (CMO) தலைமையில் சிறப்பு மருத்துவக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.