தற்போது நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பத்தின் தாக்கம் 40, 42 டிகிரி என உயர்ந்து, தற்போது 46 டிகிரி செல்சிஸை எட்டியுள்ளது. இந்த கடுமையான வெயிலில் இருந்து தப்பிக்க ஏசி ஒரு சிறந்த தீர்வாக மாறியுள்ளது. இன்று நகர்ப்புறங்களில் பெரும்பாலான வீடுகளில் ஏசி என்பது அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது.
ஏசியின் பயன்பாடு இந்தியாவில் இந்த அளவிற்கு அதிகரித்துள்ள நிலையில், “இந்தியாவில் முதன்முதலில் ஏசி எப்போது, யாரால் பயன்படுத்தப்பட்டது?” என்ற கேள்வி நம்மிடையே எழுவது இயல்பானதே. அதற்கான சுவாரசியமான விடை இதோ, இன்று நாம் கடைகளுக்குச் சென்று மிக எளிதாக ஏசியை வாங்கி வீட்டில் பொருத்தி விடுகிறோம். ஆனால், ஆரம்ப காலத்தில் இது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. இந்தியாவில் முதன்முதலில் நவீன ஏசி தொழில்நுட்பம் 1936-ஆம் ஆண்டு, ஜெய்ப்பூரில் உள்ள புகழ்பெற்ற ‘ராம்பாக் அரண்மனையில்’ நிறுவப்பட்டது. இதுவே இந்தியாவின் முதல் ஏசி பயன்பாடாகக் கருதப்படுகிறது.
ஜெய்ப்பூர் ராம்பாக் அரண்மனை என்பது அங்குள்ள மகாராஜாவின் அதிகாரப்பூர்வ இல்லமாக இருந்தது. இந்தியாவில் நவீன குளிர்ச்சியூட்டும் தொழில்நுட்பத்தை (AC) அறிமுகப்படுத்துவதில் இந்த அரண்மனை ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. வரலாற்று ஆதாரங்களின்படி, இந்த ஏசி அமைப்பை அந்த காலக்கட்டத்தின் முன்னணி அமெரிக்க நிறுவனமான ‘கேரியர்’ (Carrier) நிறுவியது. இந்திய அரச குடும்பங்கள் மேற்கத்திய நவீன தொழில்நுட்பங்களை எவ்வாறு தங்கள் வசதிக்காகப் பயன்படுத்தினர் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்தியாவில் உள்ள மற்ற வீடுகள் அல்லது அரசு அலுவலகங்களில் ஏசி பயன்பாட்டிற்கு வருவதற்கு பல தசாப்தங்களுக்கு முன்பே இது நடந்துவிட்டது.
இந்தியாவில் ஏசி அமைப்புகளின் பரவலான மற்றும் வணிக ரீதியான பயன்பாடு, நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பிந்தைய தசாப்தங்களில்தான் தொடங்கியது. தொழில்நுட்பம் மிகவும் மலிவாகவும், நகர்ப்புற கட்டடங்கள் மற்றும் வாகனங்களுக்கு ஏதுவாகவும் மாறிய பிறகே ஏசி அனைவரையும் சென்றடைந்தது. இருப்பினும், 1936-இல் ராம்பாக் அரண்மனையில் நிறுவப்பட்ட முதல் ஏசி சிஸ்டம், இந்திய ஏசி வரலாற்றில் பாரம்பரியமும் நவீன பொறியியலும் இணைந்த ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வாக இன்றும் பார்க்கப்படுகிறது.
