ஆந்திர மாநிலத்தில் போலீஸ் அதிகாரி போல் வேடமிட்டு, குழந்தை பாக்கியம் பெற்றுத் தருவதாகக் கூறி 2 குடும்பத்தினரிடம் ரூ.1.20 கோடி பணம் மற்றும் 17 பவுன் நகைகளை மோசடி செய்த கணவன், மனைவியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
அதாவது ஆந்திர மாநிலம் மத்தி நாயண பள்ளியைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது கணவர் விவசாயம் செய்து வருகிறார். சரஸ்வதிக்கு சிறுவயது முதலே போலீஸ் உடையணிந்து வலம் வர வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதனால், தினமும் காலையில் எழுந்து போலீஸ் உடை அணிந்து கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டு விசேஷங்களுக்குக் கூட அவர் போலீஸ் உடையில் தான் சென்று வந்துள்ளார். தான் அனந்தபூர் மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிவதாகக் கூறி அனைவரையும் நம்ப வைத்துள்ளார்.
போலீஸ் உடையில் இருந்ததால் அவரைப் பார்த்த பலரும் அவருக்கு பெரும் மரியாதை கொடுத்து வந்துள்ளனர். இதனைப் பயன்படுத்திக் கொண்ட சரஸ்வதி, தனது குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், தனது தம்பியை அமெரிக்கா அனுப்ப வேண்டும் என்றும் கூறி, தெரிந்தவர்களிடம் எல்லாம் லட்சக்கணக்கில் கடன் வாங்கியுள்ளார். கடனைத் திருப்பித் கேட்டவர்களை, “என் மீது கை வைத்தால் பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளிவிடுவேன்” என போலீஸ் பாணியிலேயே மிரட்டியும் வந்துள்ளார்.
இந்த நிலையில், ரங்க நாயக்கலு மற்றும் ராமா நாயுடு ஆகிய இரு குடும்பத்தினருடன் சரஸ்வதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை என்பதைத் தெரிந்து கொண்ட சரஸ்வதி, தனது கைவரிசையைக் காட்டியுள்ளார். கர்நாடகாவில் உள்ள ஒரு சக்திவாய்ந்த மந்திரவாதி மூலம் சிறப்புப் பூஜைகள் செய்து கொடுத்தால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்ப வைத்துள்ளார். இதனை நம்பிய இரு குடும்பத்தினரிடமிருந்தும் தவணை முறையில் மொத்தம் ரூ.1.20 கோடி பணம் மற்றும் 17 பவுன் தங்க நகைகளைச் சுருட்டியுள்ளார்.
பணம் கொடுத்து பல நாட்களாகியும் பூஜைகளுக்கான எந்த ஏற்பாடுகளையும் சரஸ்வதி செய்யாததால் சந்தேகமடைந்த பாதிக்கப்பட்டவர்கள், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சரஸ்வதி உண்மையான போலீஸ் இல்லை என்பதும், அவர் போலியாக வேடமிட்டு பலரை ஏமாற்றி வந்ததும் அம்பலமானது. இதற்கிடையே, போலீசார் தன்னைத் தேடுவதை அறிந்த சரஸ்வதி தனது செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு, கணவருடன் தலைமறைவாகியுள்ளார். தப்பியோடிய போலி பெண் போலீஸ் சரஸ்வதி மற்றும் அவரது கணவரைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
