மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், கொல்கத்தா மாநகராட்சியின் (KMC) 9-வது மண்டலத் தலைவரும், திரிணாமூல் காங்கிரஸ் (TMC) கட்சியின் மூத்த தலைவருமான தேபோலினா பிஸ்வாஸ் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜியின் குடும்பத்திற்குச் சொந்தமான ‘லிப்ஸ் அண்ட் பவுண்ட்ஸ்’ நிறுவனத்தின் 17 சொத்துக்களுக்கு கொல்கத்தா நகராட்சி சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பிய அடுத்த நாளே இந்த ராஜினாமா நிகழ்ந்திருப்பது அக்கட்சியை உலுக்கியுள்ளது.

கொல்கத்தா மாநகராட்சியின் 74-வது வார்டு கவுன்சிலரான தேபோலினா பிஸ்வாஸ், கட்சியின் அடிமட்டத் தொண்டர்களிடம் பலத்த செல்வாக்கு பெற்ற ஒரு தலைவராக அறியப்படுகிறார். அவரது நேர்மையான செயல்பாட்டிற்காகவே அவருக்கு 9-வது மண்டலத் தலைவர் என்ற முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.

செய்தியாளர்களைச் சந்தித்த தேபோலினா பிஸ்வாஸ், “அபிஷேக் பானர்ஜியின் காளிகாட் மற்றும் ஹரிஷ் முகர்ஜி சாலையில் உள்ள இடங்கள் உட்பட 17 சொத்துக்களுக்கு நகராட்சி நோட்டீஸ் அனுப்பியதில் இருந்து, விதிமுறைகளையும் சட்டங்களையும் தளர்த்தி அவரைக் காப்பாற்றுமாறு கட்சியின் உயர் மட்டத்திலிருந்து எனக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டது. அந்த அழுத்தம் மற்றும் அநீதிக்கு அடிபணிய விரும்பாததால் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” என குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

தனது சொந்தக் கட்சித் தலைவர்களுக்கு எதிராகவே போர்க்கொடி தூக்கியுள்ள அவர், “சில உண்மைகளை யாராலும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. என்னால் எனது கொள்கைகளையும், கோட்பாடுகளையும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது. அதனால்தான் இந்த பதவியை உடனடியாகத் துறக்க முடிவு செய்தேன்” என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சித் தலைவர் மாலா ராய்க்கு அனுப்பியுள்ள தேபோலினா பிஸ்வாஸ், தான் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். 74-வது வார்டு கவுன்சிலராகத் தொடர்ந்து மக்கள் மத்தியில் இருந்து கொண்டு, கட்சிக்குள்ளே இருக்கும் ஊழல் வாதிகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடுவேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள அண்மைய அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு, முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சுவேந்து அதிகாரி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கியப் புள்ளிகளின் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் ஊழல்கள் மீது கடுமையான விசாரணை நடத்தப்படும் என்று எச்சரித்திருந்தார். முதலமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கையின் காரணமாகவே தற்போது நகராட்சி நிர்வாகம் ஆக்ஷனில் இறங்கியுள்ளது என்றும், இதன் பயனாகவே டிஎம்சி கட்சியின் நேர்மையான தலைவர்கள் ஊழலை மறைக்கக் கோரும் உள்கட்சி அழுத்தத்திற்கு எதிராக வெளிப்படையாகவே கலகக் கொடி உயர்த்தத் தொடங்கியுள்ளனர் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.