புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள ஒரு பிரியாணி ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்ற சுந்தரகுமார மணிகண்டன் என்பவருக்கு, அவர் ஆர்டர் செய்த பிரியாணியில் செத்த ஈ ஒன்று கிடப்பதைக் கண்டு பேரதிர்ச்சி காத்திருந்தது. இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகத்திடம் அவர் தட்டிக்கேட்டபோது, அவர்கள் முறையான பதில் அளிக்காமல் அலட்சியப்படுத்தியுள்ளனர்.

இதனால் அதிருப்தியடைந்த அவர், நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தரமற்ற உணவை வழங்கிய ஹோட்டல் நிர்வாகத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், வழக்கு செலவிற்காக 3 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டனர்.

அதோடு நிறுத்தாமல், ஒரு வினோதமான தீர்ப்பையும் வழங்கினர். அதன்படி, பாதிக்கப்பட்ட நபருக்கு அடுத்த 5 வாரங்களுக்கு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தலா 2 பிளேட் வீதம் மொத்தம் 10 பிளேட் சிக்கன் பிரியாணியை அந்த ஹோட்டல் நிர்வாகம் முற்றிலும் இலவசமாக வழங்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.

இனி பிரியாணி போடும்போது ஈ விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு இது ஒரு பாடம் என்பது போல இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.