கல்வியின் உறைவிடமாகக் கருதப்படும் புனே மாநகரில், திருமணமான இரண்டே ஆண்டுகளில் 18 வயது இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தற்கொலை அல்ல, திட்டமிட்டப் படுகொலை என அப்பெண்ணின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் பெயர் ஸ்ருதி. இவருக்கும் புத்தபூஷன் என்பவருக்கும் காதல் இருந்து வந்த நிலையில், கடந்த 2024 மார்ச் 28 அன்று திருமணம் நடைபெற்றது. அப்போது ஸ்ருதிக்கு வயது 16 மட்டுமே. சிறுமியாக இருந்தபோதே குடும்ப கௌரவத்திற்கு அஞ்சி பெற்றோர் திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்.

திருமணம் முடிந்த சில காலத்திலேயே வரதட்சணை கேட்டு ஸ்ருதி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளிக்க முயன்றபோது, “உனது தனிப்பட்ட வீடியோக்களை இணையதளத்தில் வைரல் ஆக்கிவிடுவோம்” என கணவன் வீட்டார் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த மிரட்டலுக்குப் பயந்தே அவர் நரக வேதனையைச் சகித்துக் கொண்டுள்ளார்.

கடந்த மே 4, 2026 அன்று ஸ்ருதிக்கு திடீரென வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி மே 5 அன்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ஸ்ருதியின் பெற்றோர் கூறுகையில், “எங்கள் மகளுக்கு இயற்கையாக உடல்நிலை சரியாகாமல் போகவில்லை. கணவர், மாமனார், மாமியார் மற்றும் மைத்துனர் ஆகியோர் சேர்ந்து திட்டமிட்டு அவளுக்கு உணவில் விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டனர்” என கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தால் புனேவின் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என ஸ்ருதியின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் இது விஷம் கொடுத்த கொலையா அல்லது தற்கொலையா என்பது உறுதி செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.