உக்ரைன் ரஷ்யா போரானது தொடங்கி ஒரு வருடம் நிறைவடைய போகின்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகள் மற்றும் சொந்தங்களை இழந்து தவித்து வருகின்றனர். மேலும் சிலர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் ஆயுத உதவி செய்து வருகின்றது. போரை நிறுத்துவதற்கு பல்வேறு நாடுகள் முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை. இந்த நிலையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார்.

இதில் செய்தியாளர் ஒருவர் “உக்ரைன் ரஷ்யா போரை இந்திய பிரதமர் மோடியால் நிறுத்துவதற்கான நேரம் முடிந்து விட்டதா?” என கேட்டுள்ளார். அதற்கு ஜான் கிர்பி கூறியதாவது “இந்த போரை நிறுத்துவதற்கு இன்னும் நேரம் உள்ளது. ஆனால் அதனை பிரதமர் மோடியால் தான் செய்ய முடியும். இந்திய பிரதமர் மோடி அதிபர் புதினை சந்தித்து அவரை சமாதானம் செய்ய வேண்டும். இதற்கு இன்னும் நேரம் உள்ளது என நான் நினைக்கிறேன். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளையும் அமெரிக்கா வரவேற்கும்” என்று கூறியுள்ளார்.