உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு எரிபொருளைச் சேமிக்க வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்த இரண்டே நாட்களில், பாஜக நிர்வாகி ஒருவர் 50 வாகனங்கள் சூழ ஊர்வலம் சென்றது நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

சமீபத்தில் தெலங்கானாவில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, எரிபொருள் சிக்கனம் குறித்துப் பேசினார். பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைத்து மக்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும், தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியிருந்தார்.

இந்த அறிவுரை வெளிவந்த இரண்டு நாட்களிலேயே, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் சௌபாக்ய சிங் தாகூர், அம்மாநில பாடநூல் கழகத் தலைவராகப் பொறுப்பேற்பதற்காக உஜ்ஜைனிலிருந்து போபாலுக்குச் சென்றார். அப்போது, சுமார் 50 எஸ்யூவி (SUV) ரகக் கார்கள் மற்றும் ஆதரவாளர்களின் வாகனங்கள் புடைசூழ அவர் சென்ற வீடியோ இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது. இந்த வாகன அணிவகுப்பால் நெடுஞ்சாலையில் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும், வழிநெடுகிலும் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “மக்களுக்குச் சிக்கனம் பற்றிப் பாடம் எடுக்கும் பிரதமர், தனது கட்சி நிர்வாகிகளுக்கு அதைக் கூறவில்லையா?” எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர். “இதெல்லாம் இரட்டை வேடம்” என ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். “விதிமுறைகள் இவர்களுக்குப் பொருந்தாதா?” என மற்றொருவர் சாடியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், “நேற்று மோடி அவர்கள் பொதுமக்களை தியாகம் செய்யச் சொன்னார். ஆனால் இந்தப் படங்கள் அவருடைய அறிவுரை வெறும் வெற்றுப் பேச்சு என்பதைக் காட்டுகிறது” எனச் சாடியுள்ளார். பிரதமரின் அறிவுரைக்கு நேர்மாறாக பாஜக நிர்வாகி நடந்து கொண்ட விவகாரம், அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.