
கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மருதமலை முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் முருகன் இடது கையை இடுப்பில் வைத்தபடி கையில் தண்டத்துடன் தண்டபாணி கோலத்தில் காட்சி அளிக்கிறார். இது பாம்பாட்டி சித்தர் வடித்த சிலை ஆகும்.இந்த மருத மலைக்கு நாள்தோறும் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம்.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அங்குள்ள நீர் நிலைகளில் தண்ணீர் வற்றி போனது. இதனால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவது வழக்கமாக இருக்கிறது. இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து மருதமலை முருகன் கோவிலுக்கு செல்லும் சாலையில் 8 யானைகள் தங்களது குட்டிகளுடன் தண்ணீர் மற்றும் உணவு தேடி அலைந்து வருவது தெரியவந்துள்ளது. எனவே மருத மலைக்கு செல்லும் பக்தர்கள் மிகவும் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.