கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்திர கிரகணத்தின் போது, ஒரு அரசு மருத்துவமனையில் பரபரப்பான சூழ்நிலை உருவாகியது. கடுமையான பிரசவ வலி இருந்தும், “இப்போது குழந்தை பெற முடியாது, கிரகணம் முடிந்த பிறகே செய்ய வேண்டும்” எனக் கூறி பல கர்ப்பிணிப் பெண்கள் பிரசவ அறைக்கு செல்ல மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெல்லாரி மாவட்ட அரசு மருத்துவமனையில், ஒரு பக்கம் பெண்கள் துடித்து வலியுடன் தவிப்பதை பார்த்தும், மறுபுறம் மூடநம்பிக்கைகள் காரணமாக அவர்கள் அறுவை சிகிச்சை அறைக்கு செல்ல மறுத்தனர். “கிரகணம் காலத்தில் பிரசவம் செய்வது குழந்தைக்கும் தாய்க்கும் தீமையை ஏற்படுத்தும்” என்ற நம்பிக்கையின் அடிப்படையில், அவர்கள் பிரசவத்தை தள்ளிப் போட வேண்டும் என்று வற்புறுத்தினர்.
மருத்துவ ஊழியர்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் இடையே நடந்த உரையாடல்கள் நெருக்கடியாக இருந்தன. பிரசவத்தைக் கட்டாயமாக செய்ய வேண்டிய அவசர சூழ்நிலையில் கூட, சிலர் கிரகண நேரம் முடிவதற்கான பொறுமையை கோரினர். இது, மருத்துவ தரப்பினருக்கு பெரும் சவாலாக மாறியது.
இது தொடர்பாக பேசிய பெல்லாரி மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் ரமேஷ் பாபு ஒய்., “மருத்துவ ஆலோசனையை மதிக்காமல், வெறும் மூடநம்பிக்கையின் அடிப்படையில் பெண்கள் பிரசவத்திற்கு மறுத்தனர். இது குழந்தையின் உயிரையும், தாயின் உடல்நலத்தையும் ஆபத்துக்குள்ளாக்கும்” எனக் கடுமையாக எச்சரித்தார்.
அவரது ஆலோசனையின் பேரில், மூத்த மருத்துவர் ஒருவர் நேரில் வார்டுக்குச் சென்று, பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் நேரில் பேசினார். உடல்நலத்துக்கு ஏற்படும் அபாயங்களை விளக்கிய பின், அவர்கள் மருத்துவ நடவடிக்கையை ஏற்க வற்புறுத்தப்பட்டனர்.
“எங்கள் மருத்துவ குழு எந்த தயக்கமும் இல்லாமல், தேவையான சிகிச்சைகளை மேற்கொண்டு, பல பிரசவங்களைச் சீராக நடத்தினர்,” என்றும் டாக்டர் ரமேஷ் பாபு தெரிவித்தார்.
இந்தச் சம்பவம், சுகாதார சேவைகளுக்கு எதிராக சமூகத்தில் இன்னும் நிலவும் மூட நம்பிக்கைகள் எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளன என்பதை காட்டுகிறது.
