ஒரு குடும்பத்தில் குழந்தை பிறக்கும் தருணம் என்பது மிகவும் உணர்வுப்பூர்வமான மற்றும் இன்பகரமான தருணமாகும். பிரசவத்தின் போது ஒரு தாய் படும் உடல் ரீதியான வலியையும், மன ரீதியான போராட்டங்களையும் பற்றி நாம் எப்போதும் பேசி வருகிறோம். ஆனால், அதே பிரசவ அறைக்கு வெளியே தன் மனைவியின் உயிர்க்காகவும், பிறக்கப் போகும் குழந்தையின் பாதுகாப்புக்காகவும் ஒரு தந்தை எதிர்கொள்ளும் மன அழுத்தமும் தவிப்பும் வெளியில் தெரிவதில்லை. இதற்கிடையே, மகப்பேறு மருத்துவரான டாக்டர் கரிமா என்பவர் தனது மருத்துவமனையில் நேரில் கண்ட நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றைச் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இது பிரசவ அறைக்கு வெளியே பதற்றத்துடன் காத்திருக்கும் ஒவ்வொரு தந்தையின் உணர்வையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Dr. Garima Sawhney (@naari.talks)

அன்று பிரசவ அறைக்கு வெளியே நின்றிருந்த ஒரு வருங்கால தந்தை, பயத்திலும் கவலையிலும் விம்மி அழுதுகொண்டிருந்ததை டாக்டர் கரிமா கவனித்துள்ளார். அவரது கண்களில் கண்ணீர் வழிய நின்று கொண்டிருந்தவரிடம் சென்று, “என்ன ஆயிற்று? ஏன் அழுகிறீர்கள்?” என்று மருத்துவர் கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் கண்களைத் துடைத்தபடி, “டாக்டர், என் மனைவியும் என் குழந்தையும் மட்டும் எந்த ஆபத்தும் இல்லாமல் நல்லபடியாகத் திரும்பி வர வேண்டும், அதுமட்டும் போதும்” என்று நாத்தழுதழுக்கக் கூறியுள்ளார்.

அவரின் இந்த வார்த்தைகள் அங்கிருந்த மருத்துவப் பணியாளர்களின் இதயத்தைத் தொட்டுள்ளது. இதுகுறித்து பதிவிட்டுள்ள மருத்துவர் கரிமா, “பெற்றோராக மாறும் பயணம் என்பது குழந்தை பிறந்த பிறகு தொடங்குவதில்லை; ஒரு தம்பதி தங்களின் குழந்தையைப் பற்றித் திட்டமிடும் போதே தொடங்கிவிடுகிறது. ஒவ்வொரு தைரியமான தாய்க்கு பின்னாலும், பிரசவ அறைக்கு வெளியே தன் குடும்பத்திற்காக அமைதியாக உருகிப் பிரார்த்தனை செய்யும் ஒரு தந்தை இருக்கிறான். அவர்களின் தியாகங்களும், பொறுமையும், அன்பும் கூடப் போற்றப்பட வேண்டியவை” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.