மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அரசியல் வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், ஹூக்ளி மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சஹ்தேவ் பாக் ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 40 வயதான இவர், உள்ளூர் பஞ்சாயத்து உறுப்பினரின் கணவர் ஆவார்.
சனிக்கிழமை இரவு முதல் காணாமல் போன இவருடைய உடல், ஞாயிற்றுக்கிழமை காலை கட்சி அலுவலகத்திற்கு அருகில் உள்ள ஒரு வடிகாலில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. தனது கணவருக்கு ஏற்கனவே கொலை மிரட்டல்கள் வந்ததாகவும், இது பாஜகவினரால் திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை என்றும் அவருடைய மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.
இதேபோல் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்திலும் வன்முறைச் சம்பவங்கள் வெடித்துள்ளன. அங்குள்ள ஒரு கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட கடைகள் தீயிட்டு எரிக்கப்பட்டதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி, பாஜக ஆதரவு சமூக விரோதிகள் சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதாகச் சாடியுள்ளார். இந்த அடுத்தடுத்த வன்முறைச் சம்பவங்களால் மேற்கு வங்கத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. காவல்துறையினர் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
