கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் பனகல் கிராமத்தில், மனித உணர்வுகளை உலுக்கும் வகையிலான ஒரு சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இங்கு வசித்து வந்த 77 வயதான சிரில் மோனிஸ் என்பவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பே உயிரிழந்துள்ளார்.

ஆனால், மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த அவரது மனைவி, தனது கணவர் இறந்துவிட்டதை உணராமல், அழுகிய நிலையில் இருந்த அவரது உடலிலேயே 10 நாட்களாக ஒட்டியபடி இருந்துள்ளார்.

பெங்களூருவில் வேலை பார்க்கும் இவர்களது மகன், தினமும் போன் செய்து விசாரிக்கும்போது, அவரது தாய் ‘அப்பா நல்லா இருக்காரு’ என்றே கூறி வந்துள்ளார். சமீபத்தில் மகன் நேரில் வந்து சென்றபோது கூட இந்த அதிர்ச்சித் தகவல் அவருக்குத் தெரியவில்லை.

இந்நிலையில், அந்த வீட்டிலிருந்து வீசிய கடும் துர்நாற்றம் காரணமாகச் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் வந்து பார்த்தபோது, சடலம் முற்றிலும் அழுகிய நிலையில் இருக்க, அவரது மனைவி அந்த உடலைக் கட்டிப்பிடித்துக் கொண்டு, “என் கணவர் இங்கதான் இருக்காரு, அவரைத் தூக்கிட்டுப் போகாதீங்க” எனக் கதறியது அங்கிருந்தவர்களைக் கண்கலங்க வைத்தது.

பொதுமக்களே அந்த உடலை நெருங்கத் தயங்கிய நிலையில், சமூக ஆர்வலர் ஆரிப் என்பவர் உடலை மீட்க உதவினார். பின்னர் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அந்த ஊர் கிறிஸ்தவ மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

வெளிநாட்டில் இருக்கும் மகள் வர முடியாத சூழலில், உயிரிழந்த தந்தையின் முகத்தைக் கடைசி முறையாகக் கூட பார்க்க முடியாமல் அவரது மகன் தவித்தது அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.