இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் லைக்குகளையும் பார்வைகளையும் பெறுவதற்காக ‘பிராங்க்’ (Prank) என்ற பெயரில் மற்றவர்களைத் துன்புறுத்துவது ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது. அண்மையில் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், இளைஞர் ஒருவர் காரில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் இருந்த ஒரு முதிய பெண்ணிடம் வண்டியை நிறுத்துகிறார். அவரிடம் மிகவும் கொடூரமான முறையில், “பிணத்தை மறைத்து வைக்க இங்கே ஏதேனும் இடம் இருக்கிறதா?” என்று கேட்கிறார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோன அந்தப் பெண்மணி, பயத்தில் அங்கிருந்து வேகமாக நகர முயல்கிறார். அந்த இளைஞர் பின்னர் அது ஒரு விலங்கின் பிணம் என்று கூறிச் சமாளித்தாலும், அந்த முதியவரின் முகத்தில் தெரிந்த மரண பயம் பார்ப்பவர்களைக் கலங்க வைக்கிறது. ​இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அந்த இளைஞர் மீது கடும் கோபத்தில் உள்ளனர். ஒரு முதியவரை இப்படி மனரீதியாகத் துன்புறுத்துவது எந்த விதத்தில் நகைச்சுவையாகும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

“வியூஸுக்காக இப்படியா தரங்கெட்ட செயலில் ஈடுபடுவது? கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லையா?” என்று சமூக வலைதளங்களில் கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன. ஒரு சிலரோ இதை ஒரு சாதாரண விளையாட்டு என நினைத்துச் சிரித்தாலும், பெரும்பாலான மக்கள் இது அநாகரீகமான செயல் என்றும், இதுபோன்ற செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் ஆவேசமாகத் தெரிவித்து வருகின்றனர்.