தீவு நாடான கியூபா தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகள், அந்நாட்டின் விலைவாசியை வானளவு உயர்ந்துள்ளது.
இதனால், அங்குள்ள ஏழை மக்கள் அன்றாட உணவுக்கே திணறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பலரும் வேலை இழந்து, தெருக்களில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது . இந்த நிலையில், கியூபா பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வந்தது.
இந்த கூட்டத்தொடரில், தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு துறை மந்திரி மார்த்தா எலினா பீடோ கப்ரேரா, தனது பேச்சில், “பிச்சை எடுப்பவர்கள் உண்மையான ஏழைகள் இல்லை. அவர்கள் ஏழைகள் போல நடித்து பணம் சம்பாதிக்க முயல்கிறார்கள்” என்ற அவதூறு கருத்தை வெளியிட்டார்.
அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்கள் மற்றும் மக்கள் மத்தியில் கொடூரமான விமர்சனங்களை உருவாக்கியது. ஏற்கனவே நெருக்கடியில் மூழ்கிய மக்களின் நிலையை புரிந்துகொள்வதற்குப் பதிலாக, அவமானப்படுத்தும் வகையில் மந்திரி பேசியதாக மக்கள் கண்டனம் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, கியூபா முழுவதும் மந்திரி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. பல மக்கள் இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகங்கள் என அனைவரும் ஒரேகுரலில் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்நிலையில், பெரும் அழுத்தம் காரணமாக மார்த்தா எலினா தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரின் ராஜினாமா, சமூக நீதியை வலியுறுத்தும் முக்கிய வெற்றியாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், பிச்சை எடுக்கும் மக்களும் அடிப்படை வாழ்க்கை வசதிகளை கோரியும், அரசாங்கத்திடம் மீண்டும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.
