கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பாரிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 24 வயது வாலிபர் ஆஷிக் என்பவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்த நிலையில், அவர் தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்நிலையில், ஆஷிக் மலப்புரம் மாவட்டம் திரூர் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாரிப்பள்ளி போலீசார் திரூர் போலீசாரின் உதவியுடன் அங்கு சென்று அவரை சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர்.

அப்போது போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற ஆஷிக், அவர்களை கடுமையாகத் தாக்கினார். ஒரு கட்டத்தில் போலீஸ்காரர் சஜீர் என்பவரின் கையை அவர் ஆக்ரோஷமாக கடித்தார். இருப்பினும், போலீசார் சாமர்த்தியமாக செயல்பட்டு அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

மேலும் காயமடைந்த போலீஸ்காரர் சஜீர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே உள்ள பாலியல் வழக்குடன், தற்போது போலீசாரைத் தாக்கியதற்காக ஆஷிக் மீது கூடுதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.