கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் பிரகாஷ் பாபு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி புளோரா நான்சி மற்றும் அவரது கள்ளக்காதலன் ராஜசேகர் ஆகிய இருவருக்கும் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
மேலும் தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்த புளோரா நான்சிக்கு ராஜசேகர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவர்களின் உறவை கணவர் கண்டித்ததால், ஆத்திரமடைந்த புளோரா நான்சி தனது கள்ளக்காதலனுடன் இணைந்து கணவரைத் தீர்த்துக்கட்டத் திட்டம் தீட்டியுள்ளார்.
இதனால் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம், புளோரா நான்சி தனது கணவருக்குப் பாகற்காய் சாறில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். பிரகாஷ் பாபு மயக்கமடைந்ததும், தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து இருவரும் சேர்ந்து பிரகாஷ் பாபுவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது உடலை அருகில் இருந்த கால்வாயில் வீசி எறிந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த சிவமொக்கா மாவட்ட நீதிமன்றம், இருவர் மீதான குற்றச்சாட்டுகளும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதையடுத்து, சமூகத்தில் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க இருவருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி இந்திரா மயில்சாமி தீர்ப்பளித்தார்.
