அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரைத் தொடர்ந்து, அவர் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், முன் ஜாமீன் கோரி மணிகண்டன் தாக்கல் செய்த மனுவை, முதலில் மாவட்ட நீதிமன்றமும், பின்னர் சென்னை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன. இதையடுத்து, பெங்களூருவில் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்து, சென்னை சிறையில் அடைத்தனர்.
இதைத்தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கு விசாரணையின்போது, புகாரைத் திரும்ப பெறுவதாக நடிகை சாந்தினி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதி எம். நிர்மல்குமார், மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி, அவர்மீதான வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்டார். இந்த நிலையில், நடிகை சாந்தினி, மணிகண்டனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், “சென்னை உயர்நீதிமன்றத்தில் சமரசம் செய்யப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், நடிகை தரப்பில் அதனை மறுத்துள்ளனர்,” எனக் குறிப்பிட்டனர். இருப்பினும், “ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து நேரடியாகவே மனு தாக்கல் செய்யாமை ஏன்?” என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மணிகண்டனின் ஜாமீனை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்தனர்.
மேலும், “நடிகையின் மனு தாக்கல் செய்யப்பட்டபின்னும், ஏன் இந்த வழக்கு மூன்று ஆண்டுகள் பட்டியலிடப்படவில்லை?” என உயர் நீதிமன்ற பதிவாளரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பி, அதில் காணப்பட்ட தாமதத்திற்காக கடுமையாக எச்சரித்தனர்.
