உத்தர பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் சூரஜ் குமார் உத்தம் (22). சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் வாயிலாக, கான்பூரின் பார்ரா பகுதியைச் சேர்ந்த அகான்ஷா (20) என்ற இளம்பெண்ணுடன் இவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. அந்த நட்பு விரைவில் காதலாக மாறியது. அகான்ஷா ஒரு உணவகத்தில் பணியாற்றி வந்த நிலையில், இருவரும் ‘லிவ்-இன்’ முறையில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், அகான்ஷா ஒருவருடன் நீண்ட நேரம் பேசுவதை கவனித்த சூரஜ்குமார், அதைப் பற்றி கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த சூரஜ்குமார், அகான்ஷாவின் தலையை சுவற்றில் மோதி, பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
கொலையை மறைக்க, தனது நண்பர் ஆஷிஷ் குமாரின் உதவியுடன் அகான்ஷாவின் உடலை சூட்கேசில் அடைத்து, மோட்டார் சைக்கிளில் சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பண்டா பகுதி வரை எடுத்துச்சென்று, யமுனை ஆற்றில் வீச திட்டமிட்டுள்ளார். அதற்குமுன், அந்த சூட்கேஸை திறந்து‘செல்பி’ புகைப்படம் எடுத்து வைத்திருந்தார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதே நேரத்தில், தனது மகளை காணவில்லை என அகான்ஷாவின் தாயார் போலீசில் புகார் செய்திருந்தார். அதில், சூரஜ் குமாரே தனது மகளை கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சூரஜ், ஆரம்பத்தில் மாறுபட்ட தகவல்களைக் கூறியுள்ளார்.
தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், கொலை செய்தது உண்மையென ஒப்புக்கொண்டார். மேலும் அவரது கைபேசியில் இருந்து, உடலை அடைத்து எடுத்துச் சென்ற சூட்கேஸ் செல்பி புகைப்படமும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கொலையை மறைக்க உதவிய ஆஷிஷ் குமாரும் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
