உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரின் மீராப்பூர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சிக்கன் உணவில் செத்த பல்லி கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த உணவைச் சாப்பிட்ட இளைஞர் ஒருவரின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அவர் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

அதாவது  ரோகன் என்ற இளைஞர், திங்கள்கிழமை இரவு அங்குள்ள ‘அல்கரீம்’ என்ற ஹோட்டலில் இருந்து சிக்கன் வாங்கியுள்ளார். வீட்டிற்குச் சென்று குடும்பத்தினருடன் உணவருந்திக் கொண்டிருந்தபோது, சிக்கனில் விசித்திரமாக ஏதோ ஒன்று கிடப்பதைக் கண்டுள்ளார். அதனை உற்று நோக்கியபோது, அது சமைக்கப்பட்ட செத்த பல்லி என்பது தெரியவந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக அதனைத் தங்களது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்தனர்.

இதற்கிடையில், அந்த அசுத்தமான உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே இளைஞர் ரோகனுக்கு கடுமையான வாந்தியும், நெஞ்சு படபடப்பும் ஏற்பட்டு உடல்நிலை சீர்குலைந்தது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட போதிலும், நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக மீரட் மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அவரை பரிந்துரைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் உள்ளூர் போலீஸாரும், உணவுப் பாதுகாப்புத் துறையினரும் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.  அங்கு சமைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களை ஆய்விற்காகக் கைப்பற்றிய அதிகாரிகள், அந்த ஹோட்டலுக்கு உடனடியாக சீல் வைத்தனர். ஆய்வக அறிக்கை வந்தவுடன் ஹோட்டல் உரிமையாளர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.