மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மின்தூக்கியில் (Lift) சிக்கி 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுவன் ‘சிவம்ஷ் சைலேஷ் துத்’ என அடையாளம் காணப்பட்டுள்ளான்.

இக்கொடூர விபத்து திங்கள்கிழமை இரவு  ரித்தி சித்தி அடுக்குமாடி குடியிருப்பில் நடந்துள்ளது. சிறுவன் சிவம்ஷ் இரவு 10 மணியளவில் குடியிருப்பு வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். விளையாட்டின் போக்கில், அவன் அங்குள்ள மின்தூக்கிக்குள் (Lift) நுழைந்து பொத்தானை (Button) அழுத்தியுள்ளான். மின்தூக்கி இயங்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, இரண்டாவது மாடியை அடைவதற்கு முன்பாக எதிர்பாராதவிதமாக தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடுவழியில் நின்றது. இதனால் சிறுவன் மின்தூக்கிக்குள்ளேயே மாட்டிக்கொண்டான்.

விளையாடச் சென்ற சிவம்ஷ் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவனது குடும்பத்தினரும், குடியிருப்பாளர்களும் சிறுவனைத் தேடத் தொடங்கினர். குடியிருப்பு வளாகம் முழுவதும் தீவிரமாகத் தேடியும் சிறுவன் கிடைக்காததால், அவன் ஒருவேளை மின்தூக்கியில் மாட்டிக்கொண்டிருக்கலாமோ என்ற சந்தேகம் அவர்களுக்கு எழுந்தது.

இதையடுத்து, இரவு 11:30 மணியளவில் சின்ஹாகாட் சாலை காவல்துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மின்தூக்கியைத் திறந்து பார்த்தபோது, சிறுவன் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்திருந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.