இந்தோனேசியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பாலி தீவில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், குடியிருப்புப் பகுதிக்குள் 17 அடி நீள ராட்சத மலைப்பாம்பு ஒன்று வெள்ள நீரில் நீந்திச் சென்ற காட்சி இணையதளங்களில் வெளியாகி காண்போரை உறைய வைத்துள்ளது.

பாலி தீவில் கடந்த மூன்று நாட்களாகத் தொடர் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் அனைத்தும் ஏரிகள் போலக் காட்சியளிக்கின்றன. பல இடங்களில் வாகனங்கள் பாதி அளவிற்குத் தண்ணீரில் மூழ்கியுள்ளன. வீடுகளைச் சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்கள் வெளியே வர முடியாமல் பால்கனியில் நின்றபடி நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில், சுமார் 5 மீட்டர் (17 அடி) நீளம் கொண்ட ஒரு ராட்சத மலைப்பாம்பு, தண்ணீர் நிறைந்த சாலையின் நடுவே மிக லாவகமாக நீந்திச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த மலைப்பாம்பு வாகனங்களையோ அல்லது வீடுகளையோ தாக்காமல் தனது போக்கிலேயே சென்றாலும், குடியிருப்புப் பகுதிக்குள் இவ்வளவு பெரிய பாம்பு நுழைந்தது உள்ளூர் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. “ஒருவேளை இந்தப் பாம்பு யாராவது வீட்டிற்குள் புகுந்திருந்தால் நிலைமை என்னவாகியிருக்கும்?” என மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

சமூக வலைதளத்தில் (X தளம்) பகிரப்பட்ட இந்த 27 வினாடி வீடியோவை இதுவரை 25 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். “பாலி தீவில் இது சாதாரண விஷயம் தான்” எனச் சிலர் கூறினாலும், “குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் இது மிகப்பெரிய ஆபத்து” எனப் பலரும் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், ஒருசிலர் இது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவாக இருக்குமோ என்றும் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

மேலும் இருப்பினும், பாலி தீவில் நிலவும் மோசமான வானிலை மற்றும் இந்த வீடியோவும் உலகளவில் தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.