மகாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமியான சாகரிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த புதன்கிழமை மாலை, கடத்தப்பட்ட சம்பவம் மாநிலத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

1.5 கோடி பணத்தை கேட்டு, சிறுமியை கடத்தியது ஒரு கடத்தல் கும்பல். ஆனால், சிறுமியின் வாகன டிரைவர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஆகியோரின் விழிப்புணர்வால் அந்த திட்டம் முறியடிக்கப்பட்டது.

சாகரிகாவை கடத்தியவர்கள், அவளிடம் உன் தாத்தா எண் என்ன என்று கேட்ட போது, சிறுமி தைரியமாக “100” (போலீஸ் எண்) என்று பதிலளித்தார். அதேசமயம், கடத்தலுக்குள்ளான நிலையில் கூட சிறுமி, கடத்தல்காரர்களிடம் பல கேள்விகளை கேட்டதால், அவர்கள் தைரியம் தளர்ந்து விட்டது.

கடைசியில், அந்த சிறுமியை சாலையோரத்தில் இறக்கிவிட்டு தப்பி ஓடினர். தங்கள் காரை கூட அங்கு விட்டு விட்டு சென்றனர். சாகரிகாவை கடத்தியது ஜம்கெட் பகுதியை சேர்ந்த ஃபோரும் குழுவினர். சாகரிகாவின் தாத்தா சமீபத்தில் ஒரு கோவிலில் விழா ஒன்றை நடத்தினார்.

இதில் பெரிய தொகை வருமானம் வந்ததைக் கேள்விப்பட்ட அவர்கள், பணத்துக்காக சாகரிகாவை கடத்தியுள்ளனர். 15 நாட்களுக்கு மேல் அந்த சிறுமியின் செயல்களை கண்காணித்து, திட்டமிட்டே கடத்தல் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.