மகாராஷ்டிர மாநிலம் புனே, காலேவாடி பகுதியில் இரண்டரை வயது சிறுமிக்கு மாம்பழம் தருவதாக ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது காலேவாடி பகுதியைச் சேர்ந்த விஜய் போபட் போஸ்லே (47) என்ற நபர், கடந்த திங்கள்கிழமை தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுமிகளை அழைத்து மாம்பழம் தருவதாக ஆசை காட்டியுள்ளார். அதில் இரண்டு சிறுமிகளை வெளியே அனுப்பிவிட்டு, இரண்டரை வயதுடைய பிஞ்சுச் சிறுமியை மட்டும் தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

தங்களது மகளைக் காணாமல் தேடி வந்த தாய், சந்தேகத்தின் பேரில் அந்த நபரின் வீட்டிற்குள் விரைந்துள்ளார். அப்போது அங்கு அரங்கேறிய கொடூரத்தை நேரில் பார்த்த அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்தனர்.

சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே தலைமறைவாக இருந்த குற்றவாளி விஜய் போஸ்லேவை போலீசார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பள்ளிகளிலும் சமூகத்திலும் முன்பின் தெரியாதவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என குழந்தைகளுக்கு அறிவுறுத்தப்பட்டாலும், குடியிருப்புப் பகுதிகளிலேயே இத்தகைய வன்கொடுமைகள் நடப்பது குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.